ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்தியாவின் பெயர் பாரத் என அச்சிடப்பட்டு சர்ச்சைக்குள்ளான நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் இந்தோனேஷிய பயணம் குறித்த நிகழ்ச்சி நிரலில் “பாரத்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி-20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. வருகின்ற 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக, பாரத் குடியரசு தலைவர் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்பட வேண்டும் என சில தரப்பினர் ஆதரவும், இந்தியா என்ற பெயரே தொடர வேண்டும் என ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று மாலை, காங்கிரஸ் எம்பிகளின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் கார்கேவின் வீட்டில், I.N.D.I.A கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்தோனேஷியா புறப்படும் நிலையில், நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, "பாரத பிரதமரின் இந்தோனேஷிய பயண நிகழ்ச்சி" என்ற பெயரில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு உள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.