தேசிய அலுவலகம் திறப்பு விழா முடிந்ததும் கேசிஆர் சிறப்பு பூஜை நடத்தவுள்ளார். டெல்லியில் உள்ள சர்தார் படேல் மார்க்கில் பாரத் ராஷ்டிர சமிதி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
டிஆர்எஸ் டூ பிஆர்எஸ்:
ஆம் ஆத்மியை அடுத்து தெலுங்கானாவின் மாநிலக் கட்சியான ‘தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி’யும் தேசிய அரசியலை நோக்கி தன் பாதையை அமைத்துள்ளது. அக்கட்சியின் பெயரை 'பாரத் ராஷ்டிர சமிதி' என மாற்ற தேர்தல் ஆணையம் சமீபத்தில் அனுமதி அளித்தது. கட்சியின் நிறுவனரும், தெலுங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர் ராவ் இன்று டெல்லியில் பிஆர்எஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
முதல்முறை:
கட்சியின் பெயரை மாற்றிய பிறகு கேசிஆர் டெல்லி செல்வது இதுவே முதல் முறை. தேசிய அலுவலகம் தொடங்கப்பட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பிலும் கேசிஆர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலகம் திறப்பு விழா முடிந்ததும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு...:
முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் உள்ள வசந்த் விஹாரில் மத்திய அரசு ஒதுக்கிய நிலத்தில் டிஆர்எஸ் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டியிருந்தார். அதற்கு முன்னதாக, கேசிஆர் அவரது முதல் டெல்லி பயணத்தின் போது சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளஞ்சிவப்பு கொடி பறக்கும்:
டிஆர்எஸ் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என மாற்ற தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து டிசம்பர் 9 அன்று ஐதராபாத்தில் பிஆர்எஸ் இன் இளஞ்சிவப்புக் கொடியை முறையாக ஏற்றிவைத்த கே.சி.ஆர், 'இளஞ்சிவப்பு கொடி ஒரு நாள் செங்கோட்டையின் மேல் உயரப் பறக்கும்' என்று நம்பிக்கையுடன் பேசியிருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானின் மீது திடீர் தாக்குதல்...நடத்தியது யார்?!!!