கேரளாவில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஈரோடு அருகே பதுங்கியிருந்த ஐஎஸ் பயங்கரவாதி ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
கேரளாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மத வழிப்பாட்டு தலங்கள் மற்றும் மத தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் கேரளா தீவிரவாத தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி நேற்று ஒரு நபரை கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவரின் வீடு, திருச்சூரை சேர்ந்த ஒருவர் மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ஒருவர் என, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு, டிஜிட்டல் முக்கிய ஆவணங்கள் மற்றும் குற்றத்திற்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்க பண உதவி செய்து வந்ததும், தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் கூட்டம் நடத்தி வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதத் தலைவர்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், கேரளாவில் தீவிரவாத மற்றும் மத பிளவை ஏற்படுத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது ஊதா சட்டத்தின் கீழ் கொச்சின் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.