சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிராகரிக்க முடியாது எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 198 பக்க மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 2021ம் ஆண்டில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும், குற்றவழக்கில் கூட நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் அனுமதிகோரி கெஞ்சும் நிலை உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் மசோதாக்களை எத்தனை நாட்களுக்குத்தான் ஆளுநர் இப்படி கிடப்பில் போட்டிருப்பார்? எனவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்த அவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டுமே தவிர கிடப்பில் போடக்கூடாது எனவும் அவர் கூறினார்.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை என தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பேரவை கூட்டப்பட்டது சரியல்ல எனக்கூறி 4 மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நோட்டீஸ் பிறப்பித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை தீபாவளி விடுமுறைக்குப் பிறகு ஒத்திவைத்து உத்தரவிட்டது.