ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் என காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பதவி இழப்பு:
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 15000 ரூபாய் பிணைத் தொகையுடன் ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கட்சிகள் கூட்டம்:
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ,கார்கே தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் காலை 11:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி விஜய் சௌக் வரை நடைபயணம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.
குடியரசு தலைவரிடம்:
ராகுல் தண்டணை விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரிடம் முறையிட இன்று நேரம் கேட்டுள்ளதாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி மீதான இந்த தீர்ப்பு பிரதமர் மோடி அரசின் கண்ணியமற்ற அரசியலுக்கு எடுத்துக்காட்டு என்றார். இதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல் கூறியதென்ன?:
கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி எல்லா திருடர்களும் மோடி என்றே உள்ளனர் எனப் பேசியிருந்தார். இது குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக உள்ளதாக இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதற்கான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.