டெல்லி நிர்வாக தொடர்பான அவசர சட்டம் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி அரசில் குடிமைப் பணி அதிகாரிகளை துணை நிலை ஆளுநரே நியமிக்க வழி வகை செய்யும் வகையில் டெல்லி உயரதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்ற மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்காமல் டெல்லி அரசுக்கு ஆதரவளிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், தற்போதைய மழைக்காலக் கூட்டத் தொடரில் டெல்லி நிர்வாக அவசர சட்ட மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களைவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவை மாநிலங்கவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி,க்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
எனினும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 131 பேர் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. 102 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேறியது குறித்து பேசிய டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை என்றும் டெல்லி அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு இருக்கக் கூடாது என்ற பொதுமக்களின் கருத்துகளையும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க || அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜி... விடிய விடிய விசாரணை!!