ராஜஸ்தானில் பட்டப் பகலில், காரில் சென்று கொண்டிருந்த மருத்துவ தம்பதியை, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்களான சுதீப் குப்தாவும், அவரது மனைவி சீமா குப்தாவும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை சாலையின் நடுவே இடைமறித்து நிறுத்திய இளைஞர் ஒருவர், காரில் இருந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அவர்கள் உயிரிழந்ததை அறிந்ததும் அந்த நபர் இருசக்கர வாகனத்தை வேகமாக கிளப்பி அங்கிருந்து தப்பிச்சென்றார். பட்டப் பகலில் நடைபெற்ற இந்தக் கொலைக் காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் உயிரிழந்த மருத்துவர் சுதீப் குப்தா, அவரது மனைவி சீமா குப்தா மற்றும் தாயார் ஆகிய மூன்று பேரும் கடந்த 2019 ஆம் ஆண்டு, பெண் மற்றும் 5 வயது குழந்தையை கொலை செய்த வழக்கு ஒன்றில் சிறை சென்றவர்கள் என்பது துப்புத்துலங்கியது.
மேலும் அந்த இளைஞர் மருத்துவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது சகோதரி மற்றும் 5 வயது குழந்தையை தீவைத்து எரித்து கொலை செய்த மருத்துவர் சுதீப் குப்தா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பழி தீர்த்துக் கொள்ளவே பட்டபகலில் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் மருத்துவர் சுதீப் குப்தாவுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாவே அப்பெண்ணை மருத்துவர் சுதீப், தன் மனைவி மற்றும் தாயாருடன் சேர்ந்து தீவைத்து எரித்து கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.