அமலாக்கத்துறையின் ரெய்டு...மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

அமலாக்கத்துறையின் ரெய்டு...மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


சட்டவிரோத பணபரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக சென்னை, கரூரில் செந்தில்பாலாஜியின் இல்லத்தில் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமலாக்கத்துறையை பாஜக தவறாக பயன்படுத்துவதாகவும், விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என பாஜக அரசு நினைப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விசாரணை அமைப்புகளை தவறாக பாஜக பயன்படுத்துவது நீடிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ரெய்டு தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்கட்சிகளை துன்புறுத்த மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஜனநாயகத்திற்கு பெரும் சேதத்தை பாஜக ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான குரலை நசுக்க, அமலாக்கத்துறையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனுப்புவதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com