புதுச்சேரியில் ஆளும் கட்சிக்கு எதிராக பாஜகவும் தனது கூட்டத்தை கூட்டி வரும் நிலையில், துணை முதல்வர் பதவி கேட்டு நமச்சிவாயம் அடம்பிடித்து வருகிறாராம்.
புதுச்சேரியில், நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. இதைத்தொடர்ந்து ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் பதவியேற்ற சிறிது நாட்களிலேயே கொரோனா பாதிப்புக்குள்ளானார். இதனால் எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செய்யப்படாமல் இருந்தனர்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட பாஜக 3 நியமன எம்எல்ஏக்களை அறிவித்து, புதுச்சேரியில் தனது பலத்தை கூட்டியது.
மேலும் வெற்றிப்பெற்ற சுயேட்சை எம்எல்ஏக்களையும் தன் பக்கம் இழுத்துள்ளது. இந்த பலத்தை முன்வைத்து, துணை முதல்வர் பதவி வேண்டும் என பாஜக ரங்கசாமியை தொல்லை செய்து வருகிறது. ஆனால் ரங்கசாமியோ அந்த பேச்சிற்கே இடமில்லை எந கறாராக பேசி வருகிறார். இந்நிலையில், நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக எம்.எல்.ஏ.க்கள், நமச்சிவாயம், ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார், கல்யாண சுந்தரம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணன், பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் , பாஜகவில் இணைந்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் ( ரங்கசாமியை எதிர்த்து ஏனாம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றவர்) என 12 பேர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, ஆளுநர் தமிழசை சவுந்தரராஜனை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். ஆனால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக பாஜக தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் விசாரித்ததில், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று நமச்சிவாயம் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக எம்எல்ஏக்கள் பலமும் 12ஆக உயர்ந்திருப்பதால், ஒன்று துணை முதல்வர் பதவி வேண்டும், இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியமைக்க முயற்சிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.