தென்னாப்பிரிக்கா, கீரிஸ் நாடுகளில் பயணங்களை முடித்து கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் பிரதமர் தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென் ஆப்பிரிக்காவில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ்க்கு சென்ற பிரதமர், அந்நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான "Grand Cross of the order of honour" விருதை அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார்.
இதனைத்தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் தனது தலைமையிலான அரசு பல வளர்ச்சி சாதனைகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார். சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நிலவில் மூவர்ணக் கொடியை ஏற்றியதன் மூலம் இந்தியா தனது திறனை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் ஏதென்ஸிலிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு பிரதமர் புறப்பட்டார். தென்னாப்பிரிக்கா, கிரீஸில் நாடுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியவுடனேயே பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திற்கு செல்லும் பிரதமர் சந்திரயான்-3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து உரையாடுகிறார்.