இந்தியாவில், ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக, காணொலி மூலம் நடைபெற்று வந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இந்த முறை உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேரடியாக நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிச்சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர், கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறினார்.