உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில், விவசாயிகள் மீது வாகனத்தை மோதவிட்ட சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதற்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவே காரணம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த சம்பவத்தை நாடாளுமன்ற குளிர்காலம் கூட்டத்தொடரில் எழுப்பிய எதிர்கட்சிகள் விவசாயிகளுக்கு நீதிகேட்டு மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மகனை பாதுகாக்க முயற்சிக்க கூடும் என்பதால், மத்திய இணை அமைச்சரையும் பதவி விலகவும் அறிவுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் இன்று அவை நிகழ்வுக்கு இடையே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர். அப்போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லக்கிம்பூர் கேரி கலவரத்தை முன்வைத்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். அமைச்சரின் மகன் ஒருவர் விவசாயிகளை படுகொலை செய்துள்ள நிலையில், இது திட்டமிட்ட சதி என சிறப்பு போலீசாரின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் கூறினார். விவசாயிகளிடம் மன்னிப்பு கோரும் பிரதமர், மத்திய இணை அமைச்சரை பதவியிலிருந்து நீக்காதது ஏன் எனவும் வினவியுள்ளார்.
தொடர்ந்து பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, விவசாயிகள் படுகொலைக்கு காரணமானவர்கள், சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எந கூறினார். லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், உத்தரபிரதேச அரசும் மெத்தனபோக்குடன் இருப்பதாகவும் விமர்சித்தார்.