நீங்கள் சேற்றை வீசினாலும்...அதில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது...பிரதமர் மோடி!

நீங்கள் சேற்றை வீசினாலும்...அதில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது...பிரதமர் மோடி!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் உரையின்போது, எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மாநிலங்களவையில் இன்று இரண்டாவது நாளாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதானியும் மோடியும் நண்பர்கள் என்றும், தங்களுக்கு நியாயம் வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். 

கூச்சலுக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாநிலங்களவையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாட்டு மக்கள் கூர்ந்து கவனிப்பதாகவும், அதில் கன்னியம் காக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் மறந்துவிடக் கூடாது என்றும் பேசினார். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கைகள் அருவறுக்கும் வகையில் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் நாட்டின் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லை என்று குறை கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால், பாஜக அரசை மக்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

அவையில் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்த உறுப்பினர்களை நோக்கி, நீங்கள் சேற்றை வீசினாலும் அதில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசிய பிரதமர், நாட்டின் நீண்டகால பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முனைப்பில்தான் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படியே 11 கோடி குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாடு முழுவதும் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருவதாக மோடி கூறினார். மேலும், கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கான அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com