வாக்களிப்பது வயது வந்த அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை. ஆனால் பலர் வீட்டை விட்டு வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், தற்போது வீட்டை விட்டு வெளியில் வசிப்பவர்களும் வாக்களிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் ஒரு புதிய தீர்வைக் கொண்டு வந்துள்ளது.
அதாவது தேர்தல் ஆணையம் உள்நாட்டு வெளிநாட்டு வாக்காளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு முறையின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. இது 72 தொகுதிகளின் வாக்குப்பதிவை ஒரு வாக்குச்சாவடியில் இருந்து ரிமோட் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.
30 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தாததால் தேர்தல் ஆணையம் கவலையடைந்த நிலையில் இந்த புது முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு வாக்காளர் புதிய இடத்திற்குச் செல்லும் போது பல்வேறு காரணங்களால் தேர்தலில் வாக்களிக்க தனது வாக்குச் சாவடிக்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகலாம்.
அதைத் தவிர்த்து அனைவரும் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தையே அடிப்படையாக கொண்டு தேர்தல் ஆணையம் இம்முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
-நப்பசலையார்