பஞ்சாப் மாநிலம் சம்கவுர் சாஹிப்பில் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி, கிறிஸ்தவ மிஷனரி ஒருவர், இயேசு கிறிஸ்துவின் ஆன்மா தனக்குள் வந்ததாக கூறி, ஏழை-எழுத்தறிவற்ற மக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்தைத் தழுவத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பஞ்சாபில் சட்ட விரோதமான கட்டாய மதமாற்ற விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சர்ச்சை என்ன?:
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாபில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 1.26 சதவீதம் மட்டுமே. இங்கு பெரும்பான்மையாக சீக்கியர்களும் (57.69 சதவீதம்) மற்றும் இந்துக்களுமே (38.49 சதவீதம்) உள்ளனர். ஆனால், சமீப காலமாக, பஞ்சாபில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கான காரணமாக கட்டாய மதமாற்றம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் சமீப காலமாக கிறிஸ்தவ மத தேவாலயங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ சமூகத்தினர் வழிபாட்டுத் தலங்கள் இல்லாத இடங்களில் திடீரென தேவாலயங்கள் கட்டப்படுவதும் அங்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அரசியலமைப்புச் சட்டம் கூறுவதென்ன?:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி (பிரிவு 25-28), ஒரு நபர் தனக்கு விருப்பமான எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்கவும் அதை பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு. ஆனால் ஒருவரை வலுக்கட்டாயமாகவோ அல்லது பேராசை காட்டியோ மதமாற்றம் செய்ய இயலாது. இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295-A மற்றும் 298-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
பாஜக கூறுவதென்ன?:
பாஜக செய்தித் தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ”பஞ்சாபில் ஏழை இந்துக்கள்-சீக்கியர்கள் பெரிய அளவில் கிறிஸ்தவர்களாக மாற்றப்படுகிறார்கள். இதற்காக கிறிஸ்தவ மிஷனரிகள் பல்வேறு ஆசைகளை அந்த மக்களுக்கு உருவாக்குகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “மேடையில் நின்று கொண்டு ஏசு கிறிஸ்துவின் ஆன்மா தங்களுக்குள் இருப்பது போல் நடித்து, பலவிதமான தந்திரங்களை காட்டி ஏழை, எளிய மக்களையும், படிக்காத மக்களையும் கிறிஸ்தவ மதத்தை ஏற்க தூண்டுகிறார்கள்.” எனவும் தெரிவித்துள்ளார்.
மௌனம் காக்கும் அரசு:
பஞ்சாபின் பக்வந்த் மான் அரசு இந்த முழு விஷயத்திலும் வாய்மூடி மௌனம் காத்து வருவதாகவும், இந்த சட்டவிரோத மதமாற்றத்தைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கான முக்கிய காரணம் ஆம் ஆத்மி அரசு அவர்களை வாக்கு வங்கியாக மட்டுமாக பார்ப்பதே ஆகும் எனவும் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பகவந்த் மான் அரசு, தனது வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், இந்த விஷயத்தில் முழு உண்மை தெரிந்த பிறகும் அமைதியாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுவரை இது தொடர்பான விமர்சனங்களுக்கு பஞ்சாப் அரசும் ஆம் ஆத்மியும் தொடர்ந்து எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றன.
-நப்பசலையார்
இதையும் படிக்க: நோ டூ சீனா...யெஸ் டூ இந்தியா!! அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவதென்ன?!!