வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தி சந்திப்பு:
அரியானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் டெல்லி சென்றார். பின்னர் அவரும், ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் இணைந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் இல்லத்துக்கு சென்றனர். அங்கு, சோனியாகாந்தியை சந்தித்து இருவரும் பேசினர்.
சோனியா - நிதிஷ் சந்திப்பு:
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் சோனியாகாந்தியை நிதிஷ்குமார் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
பாஜகவை வீழ்த்த..:
பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், லாலு பிரசாத் ஆகிய இருவரும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து சோனியாகாந்தியிடம் பேசியதாகக் தெரிவித்தனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று சோனியா காந்தி கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.