ஆட்டோமெஷின் மற்றும் சோலார் இன்வெர்ட்டர் தயாரிப்பு நிறுவனமான ஃபுஜி எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் ரூ. 150 கோடி செலவில் ஒரு மாதத்திற்கு 3,500 யூனிட் உற்பத்தி செய்யும் சோலார் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி உற்பத்தி பிளாண்டை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது.
ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சோலார் இன்வெர்ட்டர்களில் பல்வேறு கூறுகளை உற்பத்தி செய்வதற்கும் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகளையும் அசெம்பிள் செய்வதற்கான வசதி கொண்ட பிளான்ட்டாக இதனை அமைத்துள்ளது.
இந்த புதிய பிளாண்ட்டில் தற்போது 0.4 kW முதல் 75 kW வரையிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பிளாண்ட்டாகவும், வருங்காலங்களில் இதனை 710 Kw வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஃபுஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பிளான்ட் மூலம் கிரேன்கள், லிஃப்ட், சிமெண்ட் நிறுவனங்கள், கொதிகலன்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, கனரக தொழிற்சாலைகளின் மின் தேவைகளை பூர்த்தி செய்யவதை இலக்காகக் கொண்டு, இந்தியாவில் தனது பவர் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் வணிகத்தை ஃபுஜி நிறுவனம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 1,500 கோடி வர்த்தகத்தை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், தற்போது 250 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்க உள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் வாயிலாக 25% க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் சோலார் இன்வெர்ட்டர் சந்தையின் ஒட்டுமொத்த அளவு தற்போது ஆண்டுக்கு ரூ. 1,750 கோடியாக உள்ள நிலையில், சூரிய மின் உற்பத்தியில் விரைவான மற்றும் கணிசமாக வளர்ச்சி ஏற்படும் என்று தொழில்துறை வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.