மோர்பி தொங்கும் பாலம் விபத்து...குஜராத் அரசிடம் கேள்வி...பதிலளிக்குமா அரசு?!!

மோர்பி தொங்கும் பாலம் விபத்து...குஜராத் அரசிடம் கேள்வி...பதிலளிக்குமா அரசு?!!
Published on
Updated on
1 min read

மோர்பி பாலம் விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  விசாரணையின் போது ​​குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நீங்கள் உங்கள் சாதுர்யத்தை காட்டாதீர்கள், கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் போதும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்:

குஜராத்தில் மோர்பி பாலம் விபத்துக்குள்ளானதில் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாலம் சீரமைக்கும் ஒப்பந்தத்தை வழங்கிய விதம் குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு ஏன் டெண்டர் அறிவிக்கவில்லை என்று சம்மனில் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.  விசாரணையின் போது, ​​தலைமை நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு, இந்த முக்கியமான பணிக்கான ஒப்பந்தம் ஒன்றரை பக்கங்களில் எப்படி முடிந்தது என்றும் கேட்டது. 

ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்:

மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரிக்க நீதிக் கமிஷன் அமைக்கக் கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று பொதுநல மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷால் திவாரி சமர்ப்பித்ததை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு கவனத்தில் கொண்டதுடன் எங்களுக்கு காகிதங்கள் தாமதமாகவே கிடைத்தன எனவும் அவசரம் என்றால் என்ன? எனவும் விஷால் திவாரியிடம் கேட்டனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் நாட்டில் பல தொன்மையான கட்டமைப்புகள் இருப்பதால் இந்த விவகாரம் அவசரமானது எனவும் இந்த விஷயத்தை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார்.  
 

மனுவில் கூறப்பட்டது என்ன?:

குஜராத்தின் மோர்பியில் மச்சு ஆற்றின் மீது பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து அரசு அதிகாரிகளின் அலட்சியத்தையும், மோசமான தோல்வியையும் காட்டுகிறது என்று மனுவில் திவாரி கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், தவறான நிர்வாகம், கடமை தவறுதல் மற்றும் பராமரிப்பின் அலட்சியம் ஆகியவற்றால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு சம்பவங்கள் நம் நாட்டில் நடந்துள்ளன.  அவற்றுள் தவிர்க்கப்படக்கூடிய சம்பவங்களும் உள்ளன என்று பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com