சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் போலீசார் உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்ற இருப்பதால், அப்பகுதி முழுவதும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் இல்லம், குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சுமார் 40 ஆயிரம் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்ற உள்ள நிலையில் அங்கும் ஏராளமான போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் திருச்சி, சேலம் ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ரயில்வே போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் பைகளை சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க || மூவர்ண விளக்குகளில் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்!!