"ராகுல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் முயற்சி தோல்வி" கே.எஸ் அழகிரி!!

"ராகுல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் முயற்சி தோல்வி" கே.எஸ் அழகிரி!!
Published on
Updated on
2 min read

நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தியை நுழைய விடாமலும், பேச விடாமலும் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனைக்கு தடை விதித்ததுக் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார். ஆயிரம் கோடி கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதைபோல மோடியும், மற்றவர்களும் சேர்ந்து மிகவும் கீழ்த்தரமான காரணங்களை கூறி அவரை நாடாளுமன்றத்துக்கு நுழைய விடாமலும், பேச விடாமலும் செய்ய வேண்டும் என்று செய்தார்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியமிக்க நீதிமன்றம் அதை முறியடித்து இருக்கிறது" என கூறியுள்ளார்.

மேலும்,"உச்சநீதிமன்ற நீதிபதி தெளிவாக கூறியிருக்கிறார். இதை ஒரு குற்றம் என்று கீழமை நீதிமன்றம் கருதி இருந்தால் தண்டனை கொடுக்கலாம். ஆனால் மிகச் சரியாக 2 ஆண்டுகள் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு நாள் குறைத்துக் கொடுத்திருந்தால் கூட பதவி பறிப்பு இருக்காது என்று கூறியிருக்கிறார். இதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருமே இதன் மூலம் இந்தியாவில் நீதி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள். அதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்" என பேசியுள்ளார்.

மேலும்," மோடி சொல்லி இருக்கிறார் எதிர்க்கட்சிகள் நல்லதும் செய்ய மறுக்கிறார்கள். எங்களையும் செய்ய விடுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். மோடி நடத்துவது கூட்டணி ஆட்சி அல்ல. தன்னாட்சி. பண மதிப்பிழப்பை மோடி செய்தார். அதனால் நாட்டில் ஒருவருக்கு கூட பலன் இல்லை. விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் தருவேன் என்று சொன்னார். ஆனால் விவசாயமே விழுந்து விட்டது. இரண்டு கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார். ஆனால் இருந்த வேலையும் போய்விட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 9 முதல் 10 சதவீதம் வரை உள்நாட்டு உற்பத்தி இருந்தது. ஆனால் தற்போது 6 முதல் 7 சதவீதமாக உள்ளது. மோடி தவறான கொள்கைகளின் மூலமாக இதை செய்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது" என கண்டித்துள்ளார்.

மேலும் "இனக்கலவரம், ஜாதி கலவரத்தை உருவாக்கி வாக்கு வங்கியை தன் பக்கம் இழுப்பதுதான் பாஜகவின் கொள்கை. அதை அவர்கள் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள். இந்தி பேசுவதை, மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கட்டும் என நேரு ஒரு உத்தரவாதத்தை அளித்திருந்தார். அது இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. அமித்ஷா இந்தி படி என்கிறார். படி என்பது வேறு. திணிப்பது என்பது வேறு. எதையும் திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" எனச் சாடியுள்ளார்

மேலும், ஒருவர் நடப்பது என முடிவு செய்துவிட்டால் நன்றாக நடக்கட்டும். நீண்ட தூரம் நடக்கட்டும். ஆனால் நடைபயணம் என்று சொல்லிவிட்டு சொகுசு பேருந்தில் வருவது, வேனில் வருவதெல்லாம் தப்பு. மக்கள் எள்ளி நகையாடுவார்கள். தமிழ்நாட்டில் நிறைய பேர் நடந்து இருக்கிறார்கள். அதற்குப் பெயர்தான் நடைபயணம். சொல்வதைக் கூட காப்பாற்ற முடியாதவரை எப்படி தலைவர் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com