உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக, வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில், காசி விஸ்வநாதர் கோயில் வளாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கங்கை கரையுடன் காசி விஸ்வநாதர் கோயிலை நேரடியாக இணைக்கும் வகையில், 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அருங்காட்சியகம், நூலகம், பல்நோக்கு அரங்குகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் வளாகத்தை, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதனால் காசி நகரமே தற்போது விழாக் கோலம் பூண்டுள்ளது. கோயில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சன்னதிக்கு செல்லும் தெருக்களில் அமைந்துள்ள கட்டிடங்களின் முகப்புகள் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளன, மேலும் பல கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, வாரணாசி சென்றுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமது மனைவியுடன் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார்.