வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கர்நாடக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராசன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் அங்கு வசிக்கும் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் பாஜக சார்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக இதில் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் துவங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர்.
அப்போது முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு பாடி கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த வைத்தார். இந்த சம்பவம் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பாவின் இந்த நடவடிக்கையானது பாஜகவின் தமிழர் விரோத போக்கை வெளிப்படுத்துவதாக தெரிவித்த அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கர்நாடக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.