ராஜஸ்தானில் கட்டி தோல் நோய் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. லம்பி வைரஸால் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பசுக்கள் உயிரிழந்துள்ளன. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான பாஜக இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தின் முதலமைச்சரனான கெலாட்டின் அரசை தாக்கி வருகிறது. தலைநகர் ஜெய்ப்பூரில், கெலாட் அரசுக்கு எதிராக பாஜகவினர் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் லம்பி வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், 8 லட்சம் மாடுகளுக்கு லும்பி நோய் தாக்கியுள்ளது. மாநிலத்தில் 22 மாவட்டங்களில் கட்டி தோல் நோய் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லம்பி வைரஸால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளால், மாநிலத்தில் பால் உற்பத்தியும் குறைந்துள்ளது. பால் தட்டுப்பாடு காரணமாக பல மாவட்டங்களில் அதன் விலையும் உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா தலைமையில் ஜெய்ப்பூரில் இன்று நூற்றுக்கணக்கான பாஜகவினர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். பாஜகவினரை தடுத்து நிறுத்த போலீசார் தடுப்பு வேலிகளை வைத்திருந்தனர். தடுப்பு வேலிகளைத் தாண்டி சென்று தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கெலாட் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை தடுக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
சட்டசபை அணிவகுப்புக்கு முன், சதீஷ் பூனியா கூட்டத்தில் பேசிய போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்தியா மற்றும் ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் அரசு விரைவில் அழிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
திங்களன்று, முதல்வர் அசோக் கெலாட், மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
”கட்டித் தோல் நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதுதான் எங்களின் முன்னுரிமை, தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும், எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இதை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை கோருகிறோம்” என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்.
ராஜஸ்தானில் கட்டி நோயால் மாடுகள் இறந்து வருகின்றன. இது தொடர்பாக அரசியலும் சூடுபிடித்துள்ளது. காங்கிரசும், பாஜகவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். பசுக்கள் தொடர்பான கடுமையான அரசியலுக்கு மத்தியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் புதன்கிழமை ராஜஸ்தானுக்கு வருகைத் தரவுள்ளார்.
மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானுக்கு வருவார் என செய்தி வெளியாகியுள்ளது. மாநிலத்தில் மோசமடைந்து வரும் கட்டி நோயின் நிலையை அவர்கள் கணக்கெடுப்பார்கள். இதனுடன், மத்திய திட்டங்களின் அடிப்படையில் நிலைமையை ஆராய்வார்கள். மேலும், கால்நடை வளர்ப்பாளர்களுடன், கட்டி நோய் பாதிப்பு குறித்து, அமைச்சர் சஞ்சீவ் பலியான் நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளார். இதுதவிர, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கட்டி நோய் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்த அறிக்கையையும் அவர்கள் தயார் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.