எதிா்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் இலச்சினை வெளியிடப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணி என்ற பெயாில் ஓரணியில் திரண்டு உள்ளனா். எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடைபெற்றது. அதனை தொடா்ந்து 3-வது கூட்டம் மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் உணவகத்தில் நேற்று தொடங்கியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதலமைச்சா் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. I.N.D.I.A. கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை வெளியிடவும் விவாதிக்கப்பட்டது. இலச்சினையைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வடிவமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
9 இலச்சினைகள் உருவாக்கப்பட்டு, அதில் 3 இலச்சினைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த மூன்றில் எந்த இலச்சினை அதிகாரபூர்வமானதாக இருக்கும் என்பது இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதியம் 2 மணி வரை தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மராட்டிய காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் மதிய விருந்தையடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கவுள்ளனா்.