தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!

Published on
Updated on
1 min read

கர்நாடகாவில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.  


தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால்  தடையை மீறி பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இவர்களை அம்மாநில போலீசார் கைது செய்து வருகின்றனர். 

கன்னட சலுவலி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், பெங்களூர் டவுன்ஹால் பகுதியில் இருந்து சுதந்திரப் பூங்கா வரை பேரணி செல்ல திட்டமிட்டு பேரணியாக சென்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். 

கர்நாடக மாநிலத்தின் மண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில், விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. சிக்கமங்களூரு நகரில் முதலமைச்சர் சித்தராமையாவின்  உருவ பொம்மையை எரித்து, கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் திறக்கப்பட்ட கடைகளை மூட வலியுறுத்தி, வாகனங்களை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோன்று, கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தின், கொப்பள் நகர பேருந்து நிலையம் முன்பு கன்னட அமைப்பினர்  இளநீரை கையிலேந்தியவாரு சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

முழு அடைப்பு காரணமாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வணிக வளாகங்களும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பெரும்பாலும் மக்கள் இன்றி காலியாகவே செல்கின்றன. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com