சிங்கப்பூரின் இரு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இண்டியா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.14 மணிக்கு தொடங்கியது. 741 கிலோ எடை கொண்ட முதன்மை செயற்கை கோளான டெலியோஸ்-2 சிங்கப்பூா் நாட்டின் புவி கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் லூம்லைட்- 4 எனப்படும் 16 கிலோ எடை கொண்ட சிறிய செயற்கை கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. கடல்சாா் பாதுகாப்பு மற்றும் கப்பல்
போக்குவரத்துத் கண்காணிப்புக்காக இந்த செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டின் நான்காம் நிலை பகுதியில் போயம்-2 என்ற விண்வெளி ஆய்வு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது. செயற்கை கோள்களை புவி வட்ட பாதையில் நிலைநிறுத்திய பிறகு இந்த ஆய்வு சாதனங்கள் இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ, இந்திய வான்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் இணைந்து அந்த சாதனங்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.