இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் விமான போக்குவரத்து சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அமீரக தேசிய அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கொரோனா பரவல் குறையாததால், இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு செல்லும் பயணிகள் விமான போக்குவரத்து தடையானது, தொடர்ந்து மே 4-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவானது ஜூன் மாதம் 24-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த மாதம் ஜூலை 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த காலகட்டத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்களது பயண தேதியை மாற்றி மறுபடியும் வேறு தேதியில் புக்கிங் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனினும் இந்தியாவில் இருந்து அமீரக அரசின் கோல்டன் விசா பெற்றவர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் விமானத்தில் வர எந்தவிதமான தடையும் இல்லை.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.