உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா-வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் மத்திய இணையமைச்சர் மகன் என்பதால் சிறையில் ஆஷிஷ் மிஸ்ரா-வுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் விசாரணையில் மென்மையான போக்கு கடைபிடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று நாடு தழுவிய ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் தண்டவாளங்களின் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தேவி தாஸ்புரா கிராமத்தில் பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் எதிரொலியாக தப்பார் ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அவதியடைந்தனர்.இதேபோல் ஹரியானா மாநிலம் சோனிபட் ரயில் நிலையத்தில் அதிவிரைவு படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் மோடி நகர் ரயில் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் ரயிலின் மீது ஏறி நின்றுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக செல்ல இருந்த அனைத்து ரயில்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது.