குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக வடகிழக்கு மாநிலமான திரிபுரா வந்தடைந்தார். மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள நரசிங்காரில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார்.
காலை 11.15 மணிக்கு அகர்தலா வந்தடைந்த த்ரௌபதி முர்முவை விமான நிலையத்தில் முதலமைச்சர் மாணிக் சாஹா, ஆளுநர் சத்ய நாராயண் ஆர்யா மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பிரதிமா பௌமிக் ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு விமான நிலையத்தில் திரிபுரா மாநில ரைபிள்ஸ் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து, தேசிய சட்டப் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக நரசிங்கர் சென்றிருந்தார். இதில் முதலமைச்சர் மற்றும் திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்தர்ஜித் மொஹந்தியும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ரத்தன் லால்நாத்தும் கலந்து கொண்டார்.
அதன் பிறகு முர்மு நரசிங்கர் மாவட்டத்தின் மோகன்பூர் உட்பிரிவில் உள்ள துர்காபரி தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் உரையாடினார். அப்போது குடியரசு தலைவர் ஒரு பெண் ஊழியரிடம் ” நீங்கள் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறீர்களா? உங்கள் குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்புங்கள். இலவச அரிசி மற்றும் பிற அரசின் திட்டங்களின் பலன் உங்களுக்கு கிடைக்கிறதா?” போன்ற கேள்விகளுக்கான பதில்களைக் கேட்டறிந்தார்.