கிரேட் நிக்கோபார் தீவின் பசுமையான மற்றும் அழகிய மழைக்காடுகளின் ஒரு பகுதியை வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்க மத்திய வன அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் சிவிலியன் நோக்கங்களுக்காக இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என விவரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், விமான நிலையங்கள், எரிவாயு-டீசல் மற்றும் சூரிய சக்தி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் டவுன்ஷிப்கள் ராணுவ-பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்காக அப்பகுதியில் சுமார் 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்படும் எனவும் 12 முதல் 20 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் மதிப்புமிக்க பவளப்பாறைகளும் பாதிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 30ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. இதில், கிரேட் நிக்கோபார் தீவின் காந்திநகர் மற்றும் சாஸ்திரி நகர் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும், அதை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மூன்று பெரிய நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் திட்டத்தின் இழப்பை மதிப்பிட்டு அவற்றைக் குறைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.