ஜனநாயகம் கொலை செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தின் போது மத்திய அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மோடி அரசு மிரட்டல் விடுத்ததாக ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் பாஜக ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், டெல்லியில் விவசாயிகள் குளிர், மழை, வெயில் என போராடிக் கொண்டிருந்த போது அவர்களை, பாஜக காலிஸ்தான் பயங்கரவாதிகள் போல் காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரேக்கிங் பாயிண்ட் என்ற அமெரிக்க தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் அரசை விமர்சிக்கும் சில பத்திரக்கையாளர்கள் தொடர்பாகவும் அவருக்கு நிறைய கோரிக்கைகள் வந்ததாக குறிப்பிட்ட அவர், அவர்களின் கணக்குகளை முடக்கவேண்டும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அப்படி செய்யாவிட்டால் டிவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் எனக் மிரட்டியதாகவும் பின்னர் அதையே அவர்கள் செய்ததாகவும் கூறினார். உச்சபட்சமாக இந்தியாவில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தை மூடுவோம் எனவும் டிவிட்டர் இணையதளத்தை இந்தியாவில் முடக்குவோம் எனவும் மிரட்டல் விடப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று மத்திய தகவல் மற்றும் செய்தித்தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும், டிவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பல வருட தூக்கத்திற்குப் பிறகு எழுந்திருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் போது இவ்வாறான வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!