ஸ்விக்கி, சொமோடோட்டோவுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரி... ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு...

ஸ்விக்கி, சொமேட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, சொமோடோட்டோவுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரி... ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு...
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45-வது கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படாது என கூறியுள்ளார்.

ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு வினியோக நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படுகின்றன என்றும், அவற்றின் உணவு வினியோக சேவைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர்,

உணவு வினியோக நிறுவனங்கள், உணவகங்களிடம் இருந்து வரியை பெற்று அதனை மத்திய அரசிடம் செலுத்தும் என்றும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகளுக்கான வரிச்சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன்,

மருந்துகளுக்கு மட்டுமே வரிச்சலுகை என்றும், மருத்துவ உபகரணங்களுக்கு வரிச்சலுகை கிடையாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இடோலிசுமப், பேவிபிரவிர், 2-டியோக்சி-டி-குளுகோஸ் ஆகிய கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர்,

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கீட்ருடா போன்ற சில மருந்துகளுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

தசைநார் நலிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சோல்கென்ஸ்மா, வில்டெப்சோ ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், அந்த மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டீசலில் கலப்பதற்கான பயோ டீசல் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கான தேசிய பர்மிட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் இறக்குமதிக்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான பேனாக்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது என்றும்,

ஜனவரி 1-ம் தேதியில் இருந்து காலணிகள் மற்றும் ஜவுளிகளுக்கு வரி சதவீதத்தை மாற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் சிபாரிசு செய்துள்ளதாகவும், நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com