மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத இயந்திரம் முறிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாஹ்பூரில் சம்ருத்தி விரைவுச் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மும்பை-நாக்பூரை இணைக்கும் விரைவுச் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையானது, நாக்பூர், வாசிம், அகமதாபாத், அவுரங்கபாத்,ஜல்னா, நாசிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது. இதற்காக அந்த பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நேற்று நள்ளிரவு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத இயந்திரம் திடீரென முறிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த கோரா விபத்தில், முதலில் 14 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பொழுது, மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என யூகிப்பதாக, பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க || ஸ்டெர்லைட் நிறுவனர் தமிழ்நாடு வர தடை செய்ய கோரிக்கை!!