மணிப்பூர் விவகாரம்; "பிரதமர் மெளனம் ஏன்?" காங்கிரஸ் எம்.பி.கேள்வி ! 

மணிப்பூர் விவகாரம்; "பிரதமர் மெளனம் ஏன்?" காங்கிரஸ் எம்.பி.கேள்வி ! 
Published on
Updated on
1 min read

பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மக்களவையில் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி, காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகாய், விவாதத்தை தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் பழங்குடியினர் மீதான தாக்குதல் மற்றும் அம்மாநிலத்தில் நீடித்து வரும் வன்முறை ஆகியவை குறித்து  விவாதிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா ஒப்புதல் அளித்ததை அடுத்து, இன்று முதல் 3 நாட்கள் இதன்மீது விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதேபோல், அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்தை அடுத்து, மீண்டும் மக்களவைக்கு வருகை தந்துள்ள வயநாடு எம்.பி. ராகுல் காந்தி விவாதம் மீது உரையாற்றுவார் என்றும் காங்கிரஸ் சார்பில்  அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மக்களவை இன்று காலை 11 மணி அளவில் கூடியபோது, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், பிரதமர் உரிய விளக்கம் அளிக்கக்கோரி எதிர்கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திக்கப்பட்டது. 

பின்னர், 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது ராகுல் காந்திக்கு மாற்றாக, காங்கிரஸ் கட்சியின் அஸ்ஸாம் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ் கோகாய், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது,  "ஏதோ ஓரிடத்தில் அநீதி நிலவுகிறது என்றால், அது மற்ற இடங்களில் இருக்கும் நீதிக்கு அச்சுறுத்தலாகும்" என்ற மார்ட்டின் லுதர் கிங்கின் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கிய அவர்,  மணிப்பூர் மாநிலத்தை பற்றி பேசுவது ஒட்டுமொத்த இந்தியா குறித்து பேசுவதற்கு சமம்  என்று தெரிவித்தார். 

மேலும், பிரதமருக்காக  மூன்று கேள்விகளை அவர் முன் வைத்தார். அதன்படி, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் ஏன் செல்லவில்லை? என்ற அவர், மணிப்பூர் குறித்து பிரதமர் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்றும் வினவினார். மணிப்பூர் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசானது அவர் மீது கரிசனம் காட்டுவது ஏன்? என்றும் சரமாரி கேள்வி எழுப்பினார். எப்போதும் இரட்டை என்ஜின் சக்தியுடன் செயல்படுவதாக கூறும் பாஜ.க. அரசு, மணிப்பூரில் படுதோல்வி அடைந்து விட்டதாகவும் விமர்சித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com