நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்படவுள்ள சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளுக்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது.
சந்திரயான்-3 விண்கலம் 3 ஆயிரத்து 900 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகிறது. இவை உந்துவிசை கலன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின் உந்துவிசை கலனிருந்து லேண்டர் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும்.
தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலவுக்கு சென்றவுடன் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப்பின் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.
மேலும், சந்திரயான்-3 திட்ட இயக்குநரான வீரமுத்துவேல் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்- 3 இறுதிகட்ட சோதனைகளும் நல்லபடியாக நடத்தப்பட்டன. சந்திரயானின் லேண்டர் கலன் நிலவின் தென்துருவத்தில் அடுத்த மாதம் 23 அல்லது 24-ம் தேதி தரையிறக்கப்பட உள்ளது.
கடந்த முறை ஏற்பட்ட தோல்வியின் கற்பிதங்களை அடிப்படையாக கொண்டு நிலவின் சூழலுக்கேற்ப லேண்டர், ரோவர் கலன்கள் செயல்படுவதற்காக அதன் கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லேண்டரில் எரிபொருளும் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. லேண்டரின் கால் பகுதிகள் பலப்படுத்தப்பட்டு, பெரிய சோலார் பேனல்கள் உட்பட சாதனங்கள் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.