இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு...!

இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு...!
Published on
Updated on
1 min read

குடியரசு தலைவர் பற்றி காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சனின் சர்ச்சை பேச்சால்  நாடாளுமன்றத்தில் 2 வது நாளாக கடும் அமளி நிலவியதை அடுத்து இரு அவைகளும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மழைக்கால கூட்டத் தொடர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது ஜூலை 18ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் சொற்ப நேரங்கள் மட்டுமே நடந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்கட்சி எம்.பிக்கள் மக்கள் பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தி வருகின்றனர். 

எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டம்:

நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்கள் பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதால் அவர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 27 மாநிலங்களவை எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசின் நடவடிக்கையை கண்டித்து  அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை பேச்சு:

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி , குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபத்னி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து பாஜக எம்.பிக்கள் இன்றும் நாடாளுமன்றத்தில்  அமளியில் ஈடுபட்டனர். இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்தது.

சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்:

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி , குடியரசு தலைவர் முர்முவை தவறாக பேசியதற்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். மாநிலங்களவையில் சோனியா காந்தி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால் அதற்கு பதலளித்த சோனியாகாந்தி, இக்குற்றச்சாட்டுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். இதனை ஆளும் கட்சி வேண்டுமென்றே பெரியதாக ஆக்குகிறது என்றார்.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி:

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதற்கு தேவையில்லாமல்  சோனியாகாந்தியை இழுத்தமைக்கு மன்னிப்பு கோர  காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தியதால், அவையில் கடும் கூச்சல்  குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு அவைகளும் ஒத்திவைப்பு:

மக்களவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் வருகிற ஆகஸ்ட் 1 ஆம்தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையிலும், ஆதிர் ரஞ்சன் விவகாரம் தொடர்பாக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இந்த அவையும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com