உத்தவ் தாக்கரே அவரது அணியின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, உத்தவ் தாக்கரே பாஜக மற்றும் ஷிண்டே அணியினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தவ் அணி கூட்டம்:
தேர்தல் ஆணையம் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்து தேர்தல் சின்னமான வில் அம்பை அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதன் பிறகு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை அவர்களது பக்கம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே அவரது அணியின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களை அழைத்து பேசியுள்ளார்.
சதித் திட்டம்:
இந்த சந்திப்பானது மும்பையில் உள்ள சிவசேனா பவனில் நடந்துள்ளது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களவை எம்.பி.க்கள் சஞ்சய் ராவத், சுபாஷ் தேசாய், அனில் தேசாய், அனில் பரப் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சிவசேனாவை ஒழிக்க பாஜக சதித் திட்டம் தீட்டியதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
விழிப்புடன் இருங்கள்:
3கட்சியின் பெயரும் சின்னமும் துரோகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறிய உத்தவ் அனைத்துக் கட்சிகளும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, துரோகிகளால் தாக்கரே என்ற பெயரை ஒருபோதும் திருட முடியாது எனக் கூறியுள்ளார்.
விரைவில் விசாரணை:
தேர்தல் ஆணையம் தனக்கு நியாயம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய உத்தவ் எல்லாம் அவரிடமிருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர், கட்சியின் தேர்தல் சின்னம் என எல்லாமே திருடப்பட்டுள்ளது எனவும் ஆனால் தாக்கரேவின் பெயரை அவர்களால் திருட முடியாது என உறுதியாக கூறியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் எனவும் வழக்கு விரைவாக விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்