குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தி ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கடிதம்:
இது தொடர்பாக விளக்கம் அளித்த, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தான் வாய் தவறி அவ்வாறு பேசிவிட்டதாக கூறினார். இருப்பினும் பாஜக எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில், குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவிடம் கடிதம் மூலம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரியுள்ளார். அதில், தாங்கள் வகித்து வரும் பதவியை விவரிக்க, தவறான வார்த்தையை பயன்படுத்தியமைக்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதனை, தான் வாய் தவறி பேசி விட்டதாகவும், தனது மன்னிப்பை ஏற்று கொள்ளுமாறும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே குடியரசுத்தலைவர் குறித்து பேசிய விவகாரத்தில், சோனியா மன்னிப்பு கேட்டால்தான் மக்களவை இயங்கும் என பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே கூறியுள்ளார். பழங்குடி இனத்தை அவமதிப்பதை பாஜக சகித்துக்கொள்ளாது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.