பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை, காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை கொள்ளை ஆள்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது கூட்டாளி செந்திலுக்கும் இவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் வரிச்சியூர் செல்வத்திடம் இருந்து செந்தில் தனியாக பிரிந்து வந்து, தன் மனைவியோடு விருதுநகரில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், செந்தில்குமார் கடந்த 2021ம் ஆண்டு, வரிச்சியூர் செல்வம் அழைப்பதாக மனைவி முருக லட்சுமியிடம் கூறிவிட்டு, மதுரைக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் செந்தில் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து செந்திலின் மனைவி முருக லட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், செந்திலை சென்னையில் வைத்து, ஒரு கும்பல் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. வரிச்சியூர் செல்வத்தின் செல்போன் எண்ணை சோதனை செய்ததில், செந்தில் கடைசியாக வரிச்சியூர் செல்வத்திடம் பேசியது தெரியவந்தது.
இந்நிலையில், இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வரிச்சியூர் செல்வத்தை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், செல்வம், செந்திலை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம் விருதுநகர் அழைத்து வரப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிக்கவும்: பட்டா மாற்றம் செய்ய, இடைத்தரகர்கள் வைத்து லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர்!