காரைக்காலில் நண்பரின் திருமணத்திற்கு சீதனமாக தக்காளி வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
பொதுவாக திருமணம் என்றால் சீர்வரிசை வழங்குவது, பரிசளிப்பது எல்லாம் வழக்கமான ஒன்று தான். அதன்படி நகைகள், புடவைகள், வீட்டிற்கு தேவையான கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தான் சீர்வரிசையாக கொடுத்து வருகின்றனர். ஆனால், காரைக்காலில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு தக்காளி பரிசாக வழங்கப்பட்டது தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
காரைக்கால் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும், திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் நேற்றைய தினம் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள், விலைவாசி உயர்வை உணர்த்தும் வகையில் நண்பருக்கு தக்காளியை பரிசளித்துள்ளனர்.
சமீபகாலமாக, தக்காளி விலை விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 130 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தக்காளியை பார்த்து பார்த்து உபயோகித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தக்காளி விலை உயர்வை உணர்த்தும் வகையில் தங்கள் நண்பரின் திருமணத்திற்கு ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசாக அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.