பொதுவாக செல்ல பிராணிகள் என்றாலே வெளிநாடுகள் தான் நமக்கு முதலில் நியாபகம் வரும், ஏனென்றால் அவர்கள் தான் செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கு முன்னோடி. அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் செல்ல பிராணிகளை ஒரு குழந்தைகள் போல வளர்த்து வருகின்றனர்.
கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வர் - சுபா தம்பதியினர். தம்பதி இருவரும் வீட்டில் செல்லப்பிராணிகளாக ஜீரா, ஐரிஸ் என 2 ப்ரிஸியன் வகை பெண் பூனைகளை வளர்த்து வருகின்றனர். அவற்றின் மீது பிள்ளைகள் போன்று அதிக பாசம் வைத்து வளர்த்து வந்தனர். இந்த பூனைகளை சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது அவை கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, கர்ப்பமடைந்த பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போன்று, தங்களது செல்ல பூனைகளுக்கு வளைகாப்பு விழா நடத்த உமா மகேஷ்வர் - சுபா தம்பதியனிர் தீர்மானித்தனர். இதனைத்தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் செல்லப்பிராணிகள் நிலையத்தில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்காக, பூனைகள் ஜீரா, ஐரிஸ்-க்கு பிரத்யேக உடைகள் அணிவிக்கப்பட்டு, பெண்கள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, கர்ப்பமடைந்த பெண்களுக்கு செய்வது போலவே பூனைகளுக்கும் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறத்திலான வளையல்களை அணிவித்து, நெற்றியில் பொட்டு வைத்து, பின்னர் அவற்றுக்கு சீர்வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள் மற்றும் பூனைகளுக்கு என பிரத்யேமாக தயாரிக்கப்படும் சாக்லெட் வைத்து நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு, பூனைக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்து சென்றனர். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இது முதல்முறை என்றும் இது பூனைகளை மகிழ்ச்சியாக்கும் என்றும் இந்த வளைகாப்பில் கலந்துகொண்ட விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.