சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் அன்விதா. 24 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை பிரவீன் என்பவரும் கண் மருத்துவராக உள்ளார்.
மருத்துவத்தை விரும்பி படித்து, பணியிலும் இணைந்த அன்விதாவுக்கு தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம். அதன்படி நாள்தோறும் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று ஒரு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் 23-ம் தேதியன்று இரவு சுமார் 7 மணிக்கு உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று வார்ம்-அப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கீழே விழுந்த அன்விதா துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனை கவனித்தவர்கள் உடனடியாக அன்விதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள், அன்விதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
மேலும் அன்விதா உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அன்விதாவின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்ற பெற்றோர் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.
உடல் எடையை குறைப்பதற்காக சில மாதங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்ட அன்விதா, 24 வயதிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் புனித்குமார், மிஸ்டர் தமிழ்நாடு அரவிந்த், ஐதராபாத் போலீஸ் அதிகாரி விஷால், யூ-டியூபரும் பாடி பில்டருமான ஜோ லிண்டர், மதுரை சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு, நெமிலிச் சேரியை சேர்ந்த சபரிமுத்து என்கிற ஆகாஷ் உள்பட பலர் உடற்பயிற்சியின்போது உயிரிழந்தது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் பெண் மருத்துவரும் பலியான சோகம் ஜிம் வாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.