"சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்": தீவிர சோதனையில் காவல்துறை!

"சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்": தீவிர சோதனையில் காவல்துறை!
Published on
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடி குண்டு வெடிக்கப்போவதாக, இன்று மதியம் காவல் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசியில் அழைத்து, மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் 1.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  போனில் தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்தார். இந்த தகவலின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்ட போது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்த போது, வியாசர்பாடியை சேர்ந்த 21வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் போன் செய்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து வியாசர்பாடி போலீசார்  சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரணையில் இவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதும், கடந்த ஏப்ரல் மாதம் இவரின் தந்தை மொபைலில் ஏற்கனவே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்ததும் அப்போது போலீசார் எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது. 

மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆன இளைஞர் வீட்டில் தங்கி வரும் நிலையில், இன்று காலை இளைஞரின் தந்தை மற்றும் மனைவி உடல் நல பிரச்சனை சம்மந்தமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தையின் செல்போனில் மீண்டும் இளைஞர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. 

மேலும் நேரத்தை கவனிக்காமல் இளைஞர் மாற்றி கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து இளைஞரை அனுப்பி வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com