தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தனது படங்கள் முழுதும் ஆக்ஷன் காட்சிகளை கொண்டு நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பது, அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி செய்வது என பிஸியாக இருந்து வருகிறார்.
விஷால் இப்படி தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், விஷாலின் தந்தை குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
தற்போது தயாரிப்பாளரும் விஷாலின் தந்தையுமான ஜி.கே.ரெட்டி கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்போது அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்கு வந்து மிகவும் ஆக்டீவாக இருக்கிறார்.
இதற்கு சான்றாக, சமீபத்தில் வெளியான இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 82 வயதில் கூட விடாது உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ள இவரின் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை மாநகர மாஸ்டர்ஸ் அத்தலட் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்ற ஜி.கே.ரெட்டி பதக்கம் பெற்றுள்ளார். அவரின் சாதனைகள் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடும் நடிகர் விஷால் தற்போது தனது தந்தை ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வாங்கியிருப்பது குறித்து பெருமிதத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் .
அதில், “என் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன், நீங்கள் இன்ஸ்பிரேஷனுக்கும் மேல். இந்த வயதில் டிராக்கில் ஓடி பதக்கம் வெல்வது பெரிய சாதனை.. way to go... நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாம் என்னை பொறாமைப்பட வைக்கிறது . நான் எனது பள்ளிக்கால ஸ்போர்ட்ஸ் நாட்களை மிஸ் செய்கிறேன் “ என குறிப்பிட்டுள்ளார். அதனுடன் அவரது அப்பா போட்டியில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் பரிசு வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த விஷாலின் ரசிகர்கள் கொண்டாடியும், பாராட்டியும் வருகின்றனர்.
விஷாலின் தந்தை பதக்கம் வென்றது ’வெற்றிக்கு வயது ஒருபோதும் தடையாக இருக்காது’, நல்ல உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கம் ஒரு மனிதனை எந்த வயதிலும் சுறு சுறுப்புடனும், உத்வேகத்துடனும் வைத்திருக்கும் என்பதற்கு இவரே முன்னோடி.