அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக பேசிய பிரதமர் மோடி! கூறியது என்ன?

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக பேசிய பிரதமர் மோடி! கூறியது என்ன?
Published on
Updated on
2 min read

அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பருவநிலை மாற்றம், பட்டினி, நோயை போக்க இருநாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அப்போது அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து சென்றார். இதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிசும் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியின்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. 

பின்னர், வெள்ளை மாளிகை வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையாக கருதுகிறேன் என்றார். வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைகிறோம் என்றும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், சமத்துவம், கண்ணியத்தை ஜனநாயகம் அங்கீகரிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். மேலும் ஜனநாயகம் இருநாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக உள்ளதாகவும் தெரிவித்தார். உலகில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியா, விரைவில் 3வது இடத்திற்கு முன்னேறும் என்று நம்பிக்கை தெரவித்தார். தொடர்ந்து, அமெரிக்கவாழ் இந்தியர்களால் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றும், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவுக்கு பாலமாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் திகழ்வதாகவும் பிரதமர் கூறினார். 

உள்கட்டமைப்பில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த பிரதமர்,  இந்தியா வளர்ந்தால் ஒட்டுமொத்த உலகமும் வளரும் என்று கூறினார். நவீன இந்தியாவில் பெண்களால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும், பழங்குடியினத்தில் இருந்து வந்த பெண்தான் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்றும் பெருமிதம் தெரிவித்தார். இந்திய ராணுவத்தில் பெண்கள் முக்கிய பதவிகளை அலங்கரிக்கின்றனர் என்றும், சர்வதேச அளவில் அதிக பெண் விமானிகளை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் மகிழ்ச்சிபட தெரிவித்தார்.

இதன்மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com