சந்திரயான் 3 ரோவரைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு இஸ்ரோ பெற்றுத் தந்தது. தொடர்ந்து லேண்டரில் இருந்து நிலவில் தரையிறங்கிய ரோவர், வெப்பநிலைத் தகவல்களை வழங்கியதோடு சல்பர் உள்ளிட்ட தனிமங்களின் இருப்பையும் உறுதி செய்தது.
இந்நிலையில் ரோவரைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், செப்டம்பர் 22ம் தேதி சூரியஒளி கிடைத்ததும் ரோவரும், லேண்டரும் மீண்டும் செயல்படும் என தெரிவித்துள்ளது.
லேண்டர் சேகரித்த அனைத்து தகவல்களும் பூமிக்கு வந்துவிட்டதாகவும், லேண்டரை ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதற்கு முன் நிலவின் மேற்பரப்பில் மீண்டும் மேலெழுப்பி சோதனை செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
soft landing வெற்றிகரமாக நடைபெற்றதால், மனிதர்களை நிலவுக்கு அனுப்பி திரும்பும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை அக்டோபரில் இஸ்ரோ மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த சோதனை முக்கிய முன்னேற்றமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.