ஜப்பானில் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா புறப்பட்டுச் சென்றார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை முன்னதாக திறந்து வைத்தார். தொடர்ந்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யுயேல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக்கின் பாதுகாப்பும், வெற்றியும் பிராந்தியம் மட்டுமின்றி உலகிற்கும் முக்கியமானது என சீனாவின் அச்சுறுத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்புக்கு இணங்குவோம் என குவாட் உறுப்பினர்கள் உறுதியேற்றனர்.
இறுதியாக இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டிற்காக பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக சூரிய அஸ்தமனத்துக்குப்பின் அந்நாட்டினர் வரவேற்பை புறக்கணிக்கும் நிலையில், விதிவிலக்காக பிரதமர் மோடிக்கு பூரண வரவேற்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ - பசிபிக் தீவுகளுக்கு இந்தியப் பிரதமர் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.