கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி: அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு!

Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அம்மாநில முதலமைச்சா் பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்து கட்சியினா் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 

கொச்சி அருகே உள்ள களமசேரியின் கன்வென்ஷன் சென்டரில் நேற்று அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறி தீப்பிடித்தது.

இந்த சம்பவத்தில் 3 போ் உயிரிழந்த நிலையில், 56 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை அமைப்புகளான தேசிய பாதுகாப்புப்படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை பிரிவுகளின் மூத்த அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையே கேரளா மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு - கேரளா எல்லைகளில் இருக்கும் 10 சோதனை சாவடிகளில் தமிழக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com