ஓடும் பேருந்தில் மது போதையில் ரகளை செய்த இந்தியர் கைது...

பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் சக பயணிகளையும் திட்டியபடி தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓடும் பேருந்தில் மது போதையில் ரகளை செய்த இந்தியர் கைது...
Published on
Updated on
1 min read

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மூர்த்தி நாகப்பன். 65 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி மதுபோதையில் பஸ்சில் ஏறினார். அப்போது அவர் முக கவசத்தை சரியாக அணியாமல் இருந்ததால் பஸ் டிரைவர் அவரிடம் முறையாக முக கவசம் அணியும் படி அறிவுறுத்தினார். 

இதனால் கோபமடைந்த மூர்த்தி நாகப்பன் பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளில் திட்டினார். சக பயணிகள் இதை தட்டிக்கேட்டபோது அவர்களையும் கொச்சையாக திட்டி தகராறில் ஈடுபட்டார். இது குறித்து பஸ் டிரைவர் அளித்த புகாரின் பேரில் மூர்த்தி நாகப்பனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூர்த்தி நாகப்பன் இதற்கு முன்னரும் 2 முறை இதே போல் மது போதையில் பஸ்சில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என்பதும், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் தெரியவந்தது. 

இந்த நிலையில் மூர்த்தி நாகப்பன் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மூர்த்தி நாகப்பன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 5 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com