தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வடகிழக்கு மழை துவங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக நெல்லை கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வடகிழக்கு மழை துவங்கியுள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளாவில் பரவலாக மழைபெய்யும் என்றும் தெரிவித்தார். நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
தென்மேற்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தேஜ் புயலாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். இது வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து வங்க தேச கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அரபிக் கடலில் உருவான தேஜ் புயல், தீவிர புயலாக வலுப்பெற்றதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவும் பாலச்சந்திரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.